ஹலால் சான்றிதழ் பெற்ற உணவு என்றால் என்ன?

Monday, January 16, 2017

ஹலால் சான்றிதழ் பெற்ற உணவு என்றால் என்ன?

'ஹலால் உணவு' 'ஹலால் மூலப்பொருட்கள்' 'ஹலால் சான்றிதழ் பெற்ற உணவகம்' என்றெல்லாம் இன்று அடிக்கடி செவியுறுகின்றோம். இதே வேளை, ஹலால் என்ற விடயம், அது பற்றிய தெளிவின்மை போதாததன் காரணாக, சலசலப்பையும் சிலர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது வெளிப்படை.

'ஹலால்' என்பது 'அனுமதிக்கப்பட்ட' என்ற பொருள் கொண்ட ஒரு அரபி மொழிப் பதமாகும். இச்சொல் உணவு வகைகளுக்கு பயன் படுத்தப்படும் போது பதப்படுத்தல் உட்பட்ட உணவு தொடர்பான மொத்த உற்பத்தி செயற்பாடு, பொதி செய்யப்படுவது மற்றும் அதை வினியோக்கிப்பது வரை உள்ளடங்குகின்றது.

கடந்த சில ஆண்டுகளாக ஹலால் உணவிற்கான கேள்வியும் ஹலால் சான்றிதழ் செயற்பாடு தொடர்பான அங்கீகரிப்பும் உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ளது. இதற்கான ஒரு பிரதான காரணம், ஹலால் சான்றிதழ் தாம் உண்ணும் உணவின் ஹலால் தன்மையை சந்தேகத்திற்கு இடமின்றி ஊர்ஜிதம் செய்கின்றது என்ற நிம்மதியை ஹலால் நுகர்வோருக்கு தருகின்றமையாகும். மற்றுமொரு காரணம், தமது உற்பத்திகளுக்கு ஹலால் உத்தரவாதம் இருக்கின்றமை தன் வியாபாரத்தை அதிகரிக்கின்றது என்பதை வர்த்தகர்கள் புரிந்துள்ளமையாகும்.

மதுசாரமுள்ள பானங்கள்

ஒரு பொருளின் முழு உற்பத்திச் செயற்பாட்டிலும் ஹராமான மூலப்பொருட்கள் பயன் படுத்தப்படவில்லை என்பதை ஹலால் சான்றிதழ் உறுதி செய்கின்றது. ஹராமான மூலப்பொருட்கள் எனும் போது பன்றி மற்றும் அதன் ஒரு பகுதியைப் பயன் படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்கள், மதுசாரம், செத்த மற்றும் இஸ்லாமிய முறைக்கு மாற்றமாக அறுக்கப்பட்ட மிருகங்களால் உற்பத்தி செய்யப்பட்ட மூலப்பொருட்கள், இரத்தம், அதன் துணை உற்பத்திகள், மனித உறுப்புக்கள், ஊர்வனங்கள், கொறிவிலங்குகள், பூச்சுகள், ஆபத்தான மற்றும் விஷமுள்ள உயிரிநங்கள், ஊனுண்ணிகள், இரையை வேட்டையாடும் பறவைகள் ஆகியவை உட்படும்.

சுவர்க்காரம், அழகுசாதனப் பொருட்கள், க்ளிசரின், ஜெலடின், மற்றும் சில மருந்து வகைகளின் உற்பத்தியில் பன்றியின் மாமிசம் உட்பட்ட ஏனைய உறுப்புக்கள் பயன் படுத்தப்படுவதோடு செத்த மிருகங்களின் பகுதிகளை பதப்படுத்தி சோசேஜ் மேற்தோலாக பயன் படுத்தப்படுகின்றது. அதே போன்று, கேக், ஐஸ் க்றீம், சாகலேட், சில மருந்துகள், மென்பானம் போன்றவையை உற்பத்தி செய்யும் போது மதுசாரம் பயன் படுத்தப்படுகின்றது. அதே போன்று மனித உரோமம் மற்றும் பறவையின் இறகுகளில் இருந்து பெறப்படும் L-Cysteine எனப்படும் ஒரு வகை ஆக்கக்கூறு பேக்கரி தயாரிப்புக்களில் சுவையூட்டியாக பயன் படுதுத்தப்படுகின்றதுடன் கொசினியல் என்ற பூச்சி வகையைக் கொண்டு Carminic Acid -E120 எனப்படும் உணவு நிறமூட்டி தயாரிக்கப்படுகின்றது.

மேலே விவரிக்கப்பட்ட விடயங்களை அவதானிக்கும் போது எப்படிப்பட்ட, அருவருக்கத்தக்க மற்றும் நாம் நினைத்தக் கூட பார்க்காத மூலங்களில் இருந்து நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளுக்கான மூலப்பொருட்கள் பெறப்படுகின்றன என்பது ஓரளவு தெளிவாகும். உடலுக்கு இவை தீங்கு விளைவிக்கலாம் என்பதனால், இஸ்லாமிய ஹலால் கண்ணோட்டத்தில் இவை ஏற்புடையதாக ஆகாது. மேலும் ஒரு உற்பத்தியில் பயன் படுத்தப்பட்டுள்ள மூலங்களின் இந்த தன்மைகள் பற்றி அதன் பொதியில் குறிப்பிடப்படுவதில்லை அல்லது சாமர்த்தியமாக குறி எண்களாக, நுகர்வோர் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் குறிப்பிடப்படுகின்றது.

பதப்படுத்தல் நுட்பங்கள்

ஹலால் சான்றிதழ் பெற எண்ணுபவர்கள், முதற்கண் தங்கள் உற்பத்திகளில் ஹராமான மூலப்பொருட்களோ பதப்படுத்தல் தொழில்நுட்பங்களோ பயன் படுத்தாமையை உறுதி செய்து கொள்ளல் வேண்டும். உதாரணமாக சீஸ் தயாரிப்பின் போது நொதிகள் எனப்படும் 'என்சைம்கள்' பயன் படுதுத்தப்படுவதோடு பழச்சாறுகள் தயாரிப்பின் போது பன்றியில் இருந்து பெறப்படும் ஜெலடின் பயன் படுதுத்தப்படுகின்றது.

உற்பத்தி செயற்பாட்டின் போது மட்டுமின்றி பதப்படுத்தலின் போதும் ஹராமான ஆக்கக்கூறுகள் பயன் படுத்தாமையை ஹலால் சான்றிதழ் முறைமையின் போது தீவிரமாக அவதானிக்கப் படுகின்றது. அவ்வாறான மூலப்பொருட்களை பயன் படுத்தும் உற்பத்தியாளர்கள் அவற்றை பொதியில் குறிப்பிடுவது கட்டாயமில்லை என்பதாலும் இவற்றை அறிய முற்படும் நுகர்வோருக்கு அவற்றை மறைப்பதற்காகவும் அவற்றை வெளிப்படுத்துவதில்லை. அல்லது மேலே கூறியது போல சில எண்களை மட்டும் குறிப்பிடுகின்றனர். இவற்றை அவதானிப்பதும் ஹலால் சான்றிதழ் முறைமையில் கட்டாயமாகின்றது. இல்லாவிட்டால் ஹராமான மூலப்பொருட்கள் காரணமாக அந்த உற்பத்தி மாசடைந்து ஹராமாகி விடும் அபாயமுள்ளது.

சுத்தத்தைப் பேணுவது மற்றும் மாசுள்ள ஏனைய பொருட்களால் ஒரு ஹலால் உற்பத்தி மாசடையாமல் இருப்பதும் ஹலால் சான்றிதழ் முறைமையின் போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும். இதன் காரணமாக ஹலால் சான்றிதழ் பெற்றுள்ள ஒரு தொழிற்சாலை சுத்தம், சுகாதாரம் போன்ற விடயங்களில் தீவிர அக்கறை செலுத்துவது அவசியமாகும். குறிப்பாக பணிபுரிபவர்களின் நகங்கள் வெட்டப்பட்டு கைகள் சுத்தமாக இருப்பது அவசியமாவதோடு, உரோமங்கள் கொட்டாமல் தலை மூடப்பட்டிருத்தலும் கட்டாயமாகும்.

அத்துடன் சிறப்பான களஞ்சிய வசதிகளும் ஹலால் சான்றிதழ் கோரும் தொழிற்சாலையில் இருத்தல் அவசியம். மேலும் காலாவதியான மூலப்பொருட்களை பயன் படுத்தக் கூடாது. ஹலால் சான்றிதழ் பெறும் உற்பத்திகள் எவ்வித குறைபாடும் மாசும் அற்றவையாக நுகர்வோருக்குக் கிடைப்பது உறுதி செய்யப்படுவதே இவ்வனைத்து வலியுறுத்தல்களின் இறுதி நோக்கமாகும்.

ஹலால் சான்றிதழை கோருபவருக்கு ஹலால் கோட்பாட்டைப் பேணும் உண்மையான தேவை, அர்ப்பணிப்பு, வசதி மற்றும் ஆற்றல் இருக்கின்றதா என்பதை ஊர்ஜிதம் செய்வதற்கு சான்றிதழ் வழங்குனர் பல்வேறுபட்ட நியதிகளை விதிப்பதால், ஹலால் சான்றிதழை பெறுவது எளிதான கருமம் அல்ல.

சகலருக்கும் ஹலால்

ஒரு நபர் அல்லது நிறுவனம் ஹலால் சான்றிதழைப் பெற்றதன் பின்பும் சான்றிதழின் நிபந்தனையின்படி செயற்படுவதை உறுதி செய்வதற்காக பல்வேறு பட்ட, முன்னறிவிக்கப்பட்ட விஜயங்கள், திடீர் விஜயங்கள் உட்பட்ட தொடர் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும். பொதுவாக ஹலால் சான்றிதழ் ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாவதோடு அதன் பின் அதை தொடர விரும்பினால் காலாவதியாகும் திகதிக்கு முன் புதுப்பித்தல் வேண்டும்.

ஹலால் உணவுகளை முஸ்லிம்கள் மட்டும் தான் உண்ணலாம் என ஒரு தவறான கருத்து நிலவுகின்றது. சரியாகக் கூறுவதாயின் ஹலால் உணவுகள் மட்டுமே முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்பட்டதாவதோடு இதை எவரும் உண்ணலாம். மேலும், ஹலால் உணவு என்பது இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் உணவு என்றும் சிலர் தவறாகக் கருதுகின்றனர். ஹலால் என்பது சுத்தம் சுகாதாரம் உறுதி செய்யப்பட்ட நல்ல உணவுகளே தவிர இறைவனுக்கு படைக்கப்படும் உணவல்ல. நாம் உண்ண வேண்டிய நல்ல, சுத்தமான, ஆரோக்கியமான உணவுகளே ஹலால் எனப்படுவதோடு இவற்றை இறைவனே நமக்கு தெரிவித்துள்ளான் என்பதே சரியான விளக்கமாகும். இஸ்லாமிய ஏக தெய்வக் கொள்கைப்படி இறைவன் தேவைகளற்றவனே.

மேலும் சிலர் ஹலால் என்பது சமூகத்தை பிளவு படுத்தும் ஒரு சதி என்றும் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இது, தன் மத ரீதியான சட்டங்களைப் பேணுவதற்கு உரிமை மற்றும் வசதி வழங்கப்படும் ஒரு முறைமையே அன்றி வேறில்லை. அது தவிர, இலங்கையை பொருத்தமட்டில் ஹலால் உணவுகளைக் கோரும் உள்நாட்டு வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு அவற்றை விற்பனை செய்து அதிகம் பொருளாதார நன்மைகளை அடைவோர் இந்நாட்டில் வாழும் முஸ்லிம் அல்லாதவர்களுடைய நிறுனங்களே. அவற்றில் பணிபுரிபவர்களில் அதிகமானோரும் முஸ்லிம் அல்லாதவர்களே.

வரையறுக்கப்பட்ட ஹலால் சான்றுறுதிப் பேரவை உத்தரவாத நிறுவனம் (HAC) என்பது, துறைசார் நிபுணர்கள், வர்த்தகர்கள் மற்றும் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற மார்க்க அறிஞர்கள் பலரின் வழிகாட்டலிலும் அவர்களுடைய நேரடி பங்களிப்பிலும் ஸ்தாபிக்கப்பட்டு ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ஒரு இலாப நோக்கற்றதொரு அமைப்பாகும்.

நம்பகமான தரத்துடனான நிர்வாகக் கட்டமைப்புள்ள ஒரு நிறுவனமென SLSI நிறுவனத்தின் ISO 9000-2015 தரச்சான்று பெற்றுள்ள HAC, உலக ஹலால் உணவுப் பேரவையின் உறுப்பினராவதோடு, HAC வழங்கும் ஹலால் சான்றிதழை உலகில் பெரும்பான்மையான நாடுகளில் உள்ள ஹலால் அமைப்புக்கள் ஏற்று அங்கீகரிக்கின்றன. இவ்வகையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்களின் நன்மதிப்பை தாம் பெற்றுள்ளமையை HAC பணிவுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

முடிவாக, HAC அமைப்பின் ஹலால் சான்றிதழ் எனப்படுவது உற்பத்திகளுக்கான ஒரு பொருத்தமான பெறுமதி சேர்க்கை முன்னெடுப்பு என்றால் அது மிகையாகாது எனலாம். (இக்கட்டுரை இலங்கை ஹலால் சான்றுறுதிப் பேரவை மூலம் வெளியிடப்பட்டதாகும்)

மூலம்: http://sundayobserver.lk/2017/01/15/features/what-%E2%80%98halal%E2%80%99-certified-food

What is Halal Certified Food.pdf — Never downloaded