ஹலால் பற்றிய தவறான கருத்துக்கள்

ஹலால் தொடர்பான சில தவறான எண்ணங்கள்

தவறான கருத்து 01

ஹலால் முஸ்லிம்களுக்கு மட்டுமே உள்ளதொரு கோட்பாடாகும்

ஹலால் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமான ஒரு மதக் கோட்பாடு என பரவலாக நம்பப்படுகின்றது. அதாவது ஹலால் என முத்திரை இடப்பட்டவைகளை முஸ்லிம்கள் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என சிலர் எண்ணுகின்றனர்.

இது முற்றிலும் தவறானதாெரு கருத்தாகும். ஹலால் என்பது அனுமதிக்கப்பட்ட, நல்ல, சுத்தமான உணவு வகைகளையே குறிக்கும். இது இன மத வேறுபாடின்றி நுகர்வோர் அனைவருடைய எதிர்பார்ப்பாகும் என்பதை எவரும் ஏற்பர். முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் சேர்ந்து வாழும் பல நாடுகளில் ஹலால் உணவு வகைகள் எந்த வேற்றுமையுமின்றி, அனைவராலும் விரும்பி உட்கொள்ளப்படுவதை நாம் காணலாம்.  

தவறான கருத்து 02

ஹலால் என்பது தெய்வத்திற்கு உணவை ர்பணிப்பதாகும்

இஸ்லாம் அல்லாத ஏறத்தாழ ஏனைய சகல மதங்களிலும் கடவுளுக்கு ‘உணவு படைக்கும்’ வழிபாட்டு முறை இருப்பதைக் காணலாம். ஆனால், இஸ்லாத்தில் அது போன்ற வழிபாடுகள் கிடையவே கிடையாது. இறைவன் தேவையற்றவன், உணவு போன்றவை மனிதர்களுக்கே உரியன என்றே இஸ்லாம் போதிக்கின்றது.

ஆக, ஹலால் என்பது இறைவனுக்கு உணவை அர்ப்பணிப்பது என்ற ‘குற்றச்சாட்டை’ சுமத்த முடியாத ஒரு மார்க்கம் உலகில் இருக்குமென்றால் அது இஸ்லாமாகத்தான் இருக்கும். ஹலால் என்பது மனித நுகர்விற்கு பொருத்தமான நல்ல, சுத்தமான உணவேயன்றி இதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையவே கிடையாது.

தவறான கருத்து 03

ஹலால் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகின்றது

ஹலால் நியதிகள் பேணப்படும் சுத்தமான உணவுப் பொருட்கள் ஒரு போதும் இது போன்ற நிலையை மனிதர்களில் ஏற்படுத்தாது. ஹலால் உணவு வகைகள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை. மாறாக. ஹலால் உணவு உடலாரோக்கியத்தை பாதுகாப்பதோடு இன விருத்தியை தூண்டக் கூடியவை என்பதே ஊர்ஜிதப்படுத்தப்பட்ட உண்மையாகும்.

தவறான கருத்து 04

சமூகங்கள் இடையே ஹலால் என்ற கோட்பாடு பிரிவினையை ஏற்படுத்துகின்றது

ஹலால் உணவு வகைகளை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் ‘ஹலால் உண்பவர்கள்’ ‘ஹலால் உண்ணாதவர்கள்’ என சமூகத்தை கூறு  போடுவதல்ல. மாறாக, மனிதர்கள் அனைவரும் ஹலாலான நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும். மேலும், தான் விரும்பும் உணவு வகைகளை உட்கொள்ளும் ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவது இதன் மற்றுமொரு நோக்கமாகும்.  

தவறான கருத்து 05

ஹலால் சான்றிதழைப் பெறும் நிறுவனங்களின் உற்பத்தி இரகசியங்கள் அம்பலமாகின்றன

HAC எனப்படுவது சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட, நீண்ட கால மக்கள் நன்மதிப்பைப் பெற்றவர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு உத்தியோக ரீதியான அமைப்பொன்றாகும். நற்பெயருடன் நீண்ட காலம் சேவை புறிய வேண்டும் என்பது இவ்வமைப்பின் குறிக்கோள்களில் ஒன்றாகும். எனவே, தனது ஒரு வாடிக்கையாளருடைய தொழில் இரகசியத்தை வேறு ஒருவருக்கு வெளிப்படுத்துவது போன்ற ஒழுக்கக் கேடான, சட்ட விரோதமான நடவடிக்கைகளில் தொடர்பாவதற்கு இவ்வமைப்பு ஒரு போதும் எண்ணம் கொள்ளாது என ஆணித்தரமாகக் கூறிக் கொள்கின்றொம்.