ஹலால் கோட்பாடு

‘ஹலால்’ எனப்படுவது ‘அனுமதிக்கப்பட்ட’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரபி பதமாகும்.

இஸ்லாமிய ஷரீஆ என்பது உலகின் பல்வேறுபட்ட சட்ட மற்றும் நீதித்துறைகளால் பெரிதும் போற்றப்படும் மற்றும் மேற்கோள் காட்டப்படும் ஒரு சட்டக்கோவையாகும். ஷரீஆ சட்ட வரையறைகள் பிறகாரம் தமது வாழ்வை அமைத்துக் கொள்ள என்னுபவர்கள் அவர்களுடைய அனைத்து செயற்பாடுகளிலும் ‘ஹலால்’ என்ற விடயத்தை கவனத்தில் கொள்வதும் அதைப் பேணுவதும் கட்டாயமாகும்.

‘செயற்பாடுகள்’ எனப்படும் போது உண்ணுதல், உரையாடுதல், பிரயாணம் செய்தல், வணக்க வழிபாடுகளில் ஈடுபடுதல், கொடுக்கல் வாங்கல் செய்தல் உட்பட்ட அனைத்து செயல்களும் அதில் உட்படும். சுருங்கக் கூறின், ஒரு மிடர் தண்ணீர் அருந்துவது போன்ற அன்றாட சாதாரண ஒரு செயல் கூட ‘ஹலால்’ அல்லது அதற்கு நேரெதிரான ‘ஹராம்’ (அனுமதிக்கப்படாத) ஆக ஆகிவிடலாம்.

இந்நிலை காரணமாக, பாலர் வகுப்புக்கள் முதல் பல்கலைக்கழங்கள் வரையான உலகில் உள்ள அனைத்து கல்வி அமைப்புக்களும் PhD தராதரம் உட்பட்ட கல்வித் திட்டங்கள் ஊடாக ‘ஹலால்’ என்ற விடயத்தை வரைவிளக்கணம் செய்வதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொன்டன. இதன் வெளிப்பாடாக, இத்துறையில் திறமை மிக்க கல்விமான்களும் இக்கோட்பாடு தொடர்பான மிகச்சரியான விளக்கங்களை வழங்கக்கூடிய மார்க்க மேதைகளும் உலகில் உருவாகினர்.

ஹலால் அல்லாத, ஹராமான ஒரு செயலையை செய்து விடுவது அல்லது ஹராமான உணவையோ பானத்தையோ மற்றும் மருந்தையோ உட்கொண்டு விடுவதை விட்டும் மிக எச்சரிக்கையாக இருப்பவர்கள் ஹலால் எனக் கூறப்படுபவைகள் உண்மையில் ஹலாலாக இருக்கினறனவா என்ற விடயத்தில் மிகுந்த அக்கறை கொள்கின்றமை இயல்பே. குறிப்பாக, முஸ்லிம்கள் அக்கோட்பாட்டை ஒரு கட்டாய மார்க்க நியதியாக நம்புவதால் இஸ்லாம் தோன்றிய கடந்த 1400 ஆண்டு காலமாக இந்நிலை இஸ்லாமிய உலகில் ஆழமாகவும் அழுத்தமாகவும் இருந்து வருகின்றதை யாவரும் அறிவர். ஹலாலை பொருட்படுத்தாமை இவ்வுலகில் தமக்குப் பாதகங்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி தமது முடிவில்லா மறுமை வாழ்க்கையையும் சிரமத்தில் போட்டு விடும் என்பது முஸ்லிம்களின் உறுதியான நம்பிக்கையாகும். இதன் காரணமாக, ஹலால் என்பது முஸ்லிம்களின் மர்க்க, வணக்க வழிபாடுகள் ஆகியவற்றுடன் மட்டுமன்றி கலாசாரத்துடனும் பாரம்பரியத்துடனும் பின்னிப்பிணைந்த ஒரு முக்கிய அம்சமாக பண்டைக்காலம் முதல் இருந்து வருகின்றது.